Sunday, December 13, 2015

நிலாச்சோறு - 4

ஊரெல்லாம் மழை, வெள்ளம்... கடந்த சில நாட்களாக பலத்த மழையில்லை. இப்பொழுதுதான் ஆசுவாசமாயிருக்கிறது தமிழகத்திற்கு.

மழையோ குளிரோ நேராநேரத்திற்குப் பசி மட்டும் வந்துவிடும் மனிதனுக்கு. அதுவும் மழைநேர மத்தியானத்தில் சுடச்சுடச் சோறும் காரசாரமாகக் குழம்பும், தோதாகத் தொடுகறியும் இருந்தால் மழைக்காலத்தை மனசார வரவேற்கலாம்.

இன்றைய திங்கள்கிழமை நிலாச்சோறு சமையலில்...

சாதம்
மிளகு குழம்பு
கீரை பருப்பு கடைசல்
அப்பளம்

அசைவப் பிரியர்களுக்கு

சாதம்
செட்டிநாடு மீன் குழம்பு
வஞ்சிர மீன் வறுவல்
அவித்த முட்டை

குறிப்புகளைச் சொடுக்கி சமையல் குறிப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய நிலாச்சோறு சமையலில் இடம்பெற்ற குறிப்புகளுக்காக, கவிதா, காமாட்சி மஹாலிங்கம், கார்த்திகா, ராஜபழனி சண்முகம் ஆகியோருக்கு நன்றி!

Friday, August 10, 2012

நிலாச்சோறு சமையல்- 3

நிலாச்சோறு சமையலை நிறையப்பேர் ருசிபார்க்கிறார்கள் என்று  வருகைப்பதிவேடு காட்டுகையில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. 
அந்த மகிழ்ச்சியோடு அடுத்த விருந்து...

வெள்ளிக்கிழமை விருந்து...

தேங்காய்ச்சோறு
சேனைக்கிழங்கு வறுவல்
இஞ்சித்துவையல்
கூடவே, அரிசி வடகம்!!!!!


இன்றைய விருந்தில்,

தேங்காய்ச் சோறு, சித்ரா சுந்தரின் வலைப்பக்கத்திலிருந்தும்,

சேனைக்கிழங்கு வறுவல் காமாட்சியின் வலைப்பக்கத்திலிருந்தும்,

இஞ்சித்துவையல் சுதந்திராவின் வலைப்பக்கத்திலிருந்தும்,

அரிசி வடாம் ஜெயஸ்ரீயின் வலைப்பக்கத்திலிருந்தும் பரிமாறப்பட்டுள்ளது. 

நன்றி, சித்ரா சுந்தர்,காமாட்சி, சுதந்திரா மற்றும் ஜெயஸ்ரீக்கு!



Sunday, August 5, 2012

அரைத்துவிட்ட தக்காளிச்சோறு

எப்போது தக்காளிச்சோறு செய்தாலும் வாண்டுகளின் தட்டில் தக்காளி, பச்சைமிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை இன்னபிற பொருட்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும். இதையெல்லாம் தவிர்க்கும் எண்ணத்தில் உருவானதுதான் இந்த செய்முறை

தேவையான பொருட்கள்

தக்காளி - 4
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் -2
கொத்துமல்லி இலை - ஒரு கைப்பிடி
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
அரிசி - 1 கப்
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
எண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை

தக்காளி, வெங்காயம்,பச்சைமிளகாய், மல்லி இலை, தேங்காய்த்துருவல் இவற்றையெல்லாம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

குக்கரில் எண்ணெய் விட்டு,  பட்டை, சோம்பு தாளித்து, கறிவேப்பிலையைப் போடவும். கறிவேப்பிலை வறுபட்டதும் அரைத்துவைத்த தக்காளிக்கலவையைப் போட்டு வதக்கவும்.

அதனுடன், மிளகாய் மஞ்சள் பொடிகளையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிவிட்டு, கலவையில் அரிசியைப்போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து, குக்கரைமூடி, மூன்றுவிசில்வரை வேகவிடவும். சுவையான தக்காளிச்சோறு தயார்.

Friday, August 3, 2012

நிலாச்சோறு சமையல் - 4/8/12

சனிக்கிழமை, வார இறுதி...கொஞ்சம் வித்தியாசமா சமைச்சு அசத்தலாம்.

வெந்தயக்கீரை சப்பாத்தி, பச்சைப்பட்டாணி மசாலா, வெள்ளரிக்காய் பச்சடி,
கூடவே, கொஞ்சமா சோறும்  தக்காளி ரசமும்

வார இறுதி விருந்து பரிமாறுபவர்கள் நாலுபேர், அந்த நாலுபேருக்கும் நன்றி! சோறுன்னா என்னன்னு சொன்னதுக்காக விக்கியாருக்கும் நன்றி!

வெந்தயக்கீரை சப்பாத்தி

பச்சைப்பட்டாணி மசாலா

வெள்ளரிக்காய் பச்சடி

சோறு

தக்காளி ரசம்


நன்றி: தேவி, சுந்தரா,காஞ்சனா,மணக்கும் சமையல் கூடம்

இன்றைய நிலாச்சோறு சமையல்

நிலாச்சோறு - 1

சாம்பார் சாதம்

உருளை வறுவல்

ஜவ்வரிசி வடகம்

 

இன்றைய நிலாச்சோறு சமையலில்,

சாம்பார் சாதம் கமலாவின் அடுப்பங்கரையிலிருந்தும்

உருளை வறுவல் கீதா ஆச்சலின் சமையல்கூடத்திலிருந்தும்

ஜவ்வரிசி வடகம் ச.சுதாதேவியின் சமையலறையிலிருந்தும்

பரிமாறப்படுகிறது. சாப்பிட்டுப்பார்த்து அனுபவத்தைப் பகிர்ந்துக்கோங்க :)



நன்றி :கமலா,கீதா,சமையலறை.காம்


Wednesday, August 1, 2012

அரிசிச்சோறு

அம்மா, இன்னிக்காச்சும் ராத்திரிக்கி அரிசிச் சோறாக்குவியா? அம்மாவின் முந்தானையைக் கையில் பிடித்தபடி அவள்போகுமிடமெல்லாம் கூடவே நடந்துகொண்டிருந்தது கடைக்குட்டி கற்பகம். 

ஆமாமா...ஒங்கப்பன்கொண்டுவர சம்பாத்தியத்துல அரிசிச்சோறு கேக்குதாக்கும் ஒனக்கு...கூடவே சுற்றிவந்த மகளைக் கையைப்பிடித்துத் தரையில் இருத்திவிட்டு, கிண்ணத்திலிருந்த கேழ்வரகு மாவைத் தண்ணீர்விட்டுப் பிசைய ஆரம்பித்தாள் கோமதி.  நேத்து முருங்கயிலைக் கஞ்சி, இன்னிக்கிக் கேப்பக்கூழா? எனக்கு ஒண்ணும் வேணாம் போ...என்றபடி கைகளால் முட்டியைக் கட்டி அதில் முகத்தைப் புதைத்துக்கொண்டது கற்பகம். 

நெற்றி வேர்வையைத் துடைத்துக்கொண்டவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்தது. பெருசா ஏதும் சொத்துசேக்க முடியலேன்னாலும், எதையும் வித்துத்திங்கிற நிலைமைமட்டும் வரக்கூடாதென்பதில் வைராக்கியமாயிருந்தாள் கோமதி. மூத்தபிள்ளைகள் ரெண்டுபேரையும் பள்ளிக்கூடத்துக்கும் புருஷனை ரைஸ்மில்லுக்கும் அனுப்பின கையோடு பக்கத்துத் தோப்பில் வேலைக்குப்போவாள் அவள். அம்மா மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது, பட்டாம்பூச்சிமாதிரி அங்கேயே சுத்திச்சுத்தி விளையாடும் கற்பகம். மதியம்வரை தண்ணீர் பாய்ச்சிவிட்டு, மகளும் அவளும்  தூக்குச்சட்டியில் கொண்டுவந்த கம்பங்கூழையோ,குருணையரிசிக் கஞ்சியையோ குடித்துவிட்டு மத்தியானத்துக்குமேல் தோப்பைச் சுத்தப்படுத்துகிற வேலையையும் முடிப்பார்கள். 

வேலைமுடிந்ததும், பம்புசெட்டில் குளித்துவிட்டு வீடுவருவதற்குள் பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகள் வந்துவிடும். கடுங்காப்பியைப் போட்டு கையில் கொடுத்துவிட்டு நிமிர்வதற்குள் கதிரேசனும் வந்துவிடுவான்.கதிரேசனுக்கு மில்வேலைபோக, மத்தியான நேரத்தில் மூட்டைதூக்குகிற வேலையோ, குடோனில், பேப்பர் கட்டிவைக்கிற வேலையோ கிடைத்தால் அன்றைக்கு வீட்டில் அரிசிச்சோறு. இல்லையென்றால் கஞ்சியோ கூழோ தான். 

அக்காவுடனும் அண்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்தபோதும் கற்பகத்தின் கண்கள் அப்பா வருகிற வழியையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தன. தெருச் சந்தில் கதிரேசன் நுழைந்ததும் அவன் கையைத்தான் பார்த்தது கற்பகம். அப்பாவின் கையில் பெரிய பை. பைக்கு வெளியே துருத்திக்கொண்டு ஐந்தாறு வாழைப்பழங்கள். எத்தனையோ நாளுக்கப்புறம் இன்னிக்கி நல்ல சாப்பாடு சாப்பிடப்போகிறோமென்ற சந்தோஷம் மின்னியது கற்பகத்தின் கண்களில். 

அப்பா என்றபடி ஓடிப்போய் அவன் கால்களைக் கட்டிக்கொண்டது.  அப்பாவின் முகத்தில் நிறைந்திருந்த வெறுமை கற்பகத்துக்குப் புரியவில்லை. கட்டிக்கொண்ட குழந்தையை நகர்த்தி, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான் கதிரேசன்.  வேலையில் சின்னதாய் ஒர் தப்புப்பண்ணியதற்காக, கணக்குத்தீர்த்து மொத்தமாக  வீட்டுக்கு அனுப்பிவிட்டார் முதலாளி என்று மனைவியிடம் எப்படிச் சொல்லுவதென்று யோசித்தவனாக வீட்டைநோக்கி மெள்ள நடந்தான் அவன்.

Monday, July 30, 2012

சோறுதான் சொர்க்கம்!

என்ன பாட்டையா, இந்த வயசிலயும் இவ்வளவு தூரம் நடக்கணுமா? உங்க பேரனை அனுப்யிருந்தா அரைச்சுக் குடுத்தனுப்பியிருப்பேனே என்ற அரவைமில் மாரிமுத்துவிடம், அடப்போடா இவனே, இது மூணுவேளையும் சோறு தின்ன ஒடம்பு...எத்தன வயசானாலும் அப்புடியே இருக்கும் என்று முட்டியை மடக்கிக்காட்டிவிட்டு மிளகாய்ப்பொடி அரைத்த பையை வாங்கிக்கொண்டு புறப்பட்டார் வேம்புத்தாத்தா.

தாத்தாவுக்கு எழுபத்தெட்டு வயசு. கண்பார்வையிலோ, காது கேட்பதிலோ எந்தக்குறையும் கிடையாது. வாழைத்தோட்டத்திலும் வயல்காட்டிலும் இந்த வயசிலும் மண்வெட்டியும் கையுமாய் வேலைசெய்வார். ஆனா, மணிக்கணக்குக்குக் கட்டாயம் சோறு போடணும் அவருக்கு. இல்லேன்னா, எல்லாருக்கு அன்னிக்குப் பாட்டுதான்.

பாட்டியிருந்தவரைக்கும் எப்பவும் வீட்டில் சிவப்பரிசிச்சோறுதான். காலையில் பழையதும் மோரும் பச்சைமிளகாயும், மதியத்துக்கு வெள்ளி செவ்வாய் தவிர மத்தநாளெல்லாம் மீன்குழம்பும் சுடுசோறும். ராத்திரிக்குப் பால்சோறும் பக்கோடாவும். பண்டிகை வந்தாதான் இட்டிலி தோசை. இதுதான் பாட்டி இருந்தவரைக்கும் தினப்படி சமையல்.

மருமக வந்தபிறகு சிவப்புச்சோறு வெள்ளைச்சோறானாலும், வெஞ்சனமெல்லாம் விருப்பப்படி வேணும் அவருக்கு. இப்போதிருக்கிற சப்பாத்தி பூரியோ, உப்புமா கிப்புமாவோ அவருக்குச் சுத்தமாய்ப் பிடிக்காது.

 இந்த ஒத்த மனுசனுக்காகவாவது எப்படியும் சோறுவைக்கவேண்டிநயிருக்குதென்று வாய்விட்டுச் சிலநாள் புலம்புவாள் வாசுகி அண்ணி. ஆனாலும், முடிஞ்சா நீ வையி, இல்லேன்னா அதையும் நானே வச்சிக்கிறேன் என்று அவளுக்கு உரக்கப்பதில்சொல்லிவிட்டு உடைமரத்து முள்ளை ஒடித்துவிட ஆரம்பித்துவிடுவார் பாட்டையா. அவருக்குப் பின்னாலிருந்து தானும் மெள்ளமாகச் சொல்லுவாள் அண்ணி, "இவர் கிட்டேருந்து யார வேணுன்னாலும் பிரிச்சிரலாம்...சோறப் பிரிக்கமுடியாது என்று.



Search This Blog