அம்மா, இன்னிக்காச்சும் ராத்திரிக்கி அரிசிச் சோறாக்குவியா? அம்மாவின் முந்தானையைக் கையில் பிடித்தபடி அவள்போகுமிடமெல்லாம் கூடவே நடந்துகொண்டிருந்தது கடைக்குட்டி கற்பகம்.
ஆமாமா...ஒங்கப்பன்கொண்டுவர சம்பாத்தியத்துல அரிசிச்சோறு கேக்குதாக்கும் ஒனக்கு...கூடவே சுற்றிவந்த மகளைக் கையைப்பிடித்துத் தரையில் இருத்திவிட்டு, கிண்ணத்திலிருந்த கேழ்வரகு மாவைத் தண்ணீர்விட்டுப் பிசைய ஆரம்பித்தாள் கோமதி. நேத்து முருங்கயிலைக் கஞ்சி, இன்னிக்கிக் கேப்பக்கூழா? எனக்கு ஒண்ணும் வேணாம் போ...என்றபடி கைகளால் முட்டியைக் கட்டி அதில் முகத்தைப் புதைத்துக்கொண்டது கற்பகம்.
நெற்றி வேர்வையைத் துடைத்துக்கொண்டவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்தது. பெருசா ஏதும் சொத்துசேக்க முடியலேன்னாலும், எதையும் வித்துத்திங்கிற நிலைமைமட்டும் வரக்கூடாதென்பதில் வைராக்கியமாயிருந்தாள் கோமதி. மூத்தபிள்ளைகள் ரெண்டுபேரையும் பள்ளிக்கூடத்துக்கும் புருஷனை ரைஸ்மில்லுக்கும் அனுப்பின கையோடு பக்கத்துத் தோப்பில் வேலைக்குப்போவாள் அவள். அம்மா மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது, பட்டாம்பூச்சிமாதிரி அங்கேயே சுத்திச்சுத்தி விளையாடும் கற்பகம். மதியம்வரை தண்ணீர் பாய்ச்சிவிட்டு, மகளும் அவளும் தூக்குச்சட்டியில் கொண்டுவந்த கம்பங்கூழையோ,குருணையரிசிக் கஞ்சியையோ குடித்துவிட்டு மத்தியானத்துக்குமேல் தோப்பைச் சுத்தப்படுத்துகிற வேலையையும் முடிப்பார்கள்.
வேலைமுடிந்ததும், பம்புசெட்டில் குளித்துவிட்டு வீடுவருவதற்குள் பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகள் வந்துவிடும். கடுங்காப்பியைப் போட்டு கையில் கொடுத்துவிட்டு நிமிர்வதற்குள் கதிரேசனும் வந்துவிடுவான்.கதிரேசனுக்கு மில்வேலைபோக, மத்தியான நேரத்தில் மூட்டைதூக்குகிற வேலையோ, குடோனில், பேப்பர் கட்டிவைக்கிற வேலையோ கிடைத்தால் அன்றைக்கு வீட்டில் அரிசிச்சோறு. இல்லையென்றால் கஞ்சியோ கூழோ தான்.
அக்காவுடனும் அண்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்தபோதும் கற்பகத்தின் கண்கள் அப்பா வருகிற வழியையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தன. தெருச் சந்தில் கதிரேசன் நுழைந்ததும் அவன் கையைத்தான் பார்த்தது கற்பகம். அப்பாவின் கையில் பெரிய பை. பைக்கு வெளியே துருத்திக்கொண்டு ஐந்தாறு வாழைப்பழங்கள். எத்தனையோ நாளுக்கப்புறம் இன்னிக்கி நல்ல சாப்பாடு சாப்பிடப்போகிறோமென்ற சந்தோஷம் மின்னியது கற்பகத்தின் கண்களில்.
அப்பா என்றபடி ஓடிப்போய் அவன் கால்களைக் கட்டிக்கொண்டது. அப்பாவின் முகத்தில் நிறைந்திருந்த வெறுமை கற்பகத்துக்குப் புரியவில்லை. கட்டிக்கொண்ட குழந்தையை நகர்த்தி, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான் கதிரேசன். வேலையில் சின்னதாய் ஒர் தப்புப்பண்ணியதற்காக, கணக்குத்தீர்த்து மொத்தமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டார் முதலாளி என்று மனைவியிடம் எப்படிச் சொல்லுவதென்று யோசித்தவனாக வீட்டைநோக்கி மெள்ள நடந்தான் அவன்.
நல்ல முயற்சி.தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteநன்றி சென்னைப்பித்தன் அவர்களே!
ReplyDelete