Monday, July 30, 2012

சோறுதான் சொர்க்கம்!

என்ன பாட்டையா, இந்த வயசிலயும் இவ்வளவு தூரம் நடக்கணுமா? உங்க பேரனை அனுப்யிருந்தா அரைச்சுக் குடுத்தனுப்பியிருப்பேனே என்ற அரவைமில் மாரிமுத்துவிடம், அடப்போடா இவனே, இது மூணுவேளையும் சோறு தின்ன ஒடம்பு...எத்தன வயசானாலும் அப்புடியே இருக்கும் என்று முட்டியை மடக்கிக்காட்டிவிட்டு மிளகாய்ப்பொடி அரைத்த பையை வாங்கிக்கொண்டு புறப்பட்டார் வேம்புத்தாத்தா.

தாத்தாவுக்கு எழுபத்தெட்டு வயசு. கண்பார்வையிலோ, காது கேட்பதிலோ எந்தக்குறையும் கிடையாது. வாழைத்தோட்டத்திலும் வயல்காட்டிலும் இந்த வயசிலும் மண்வெட்டியும் கையுமாய் வேலைசெய்வார். ஆனா, மணிக்கணக்குக்குக் கட்டாயம் சோறு போடணும் அவருக்கு. இல்லேன்னா, எல்லாருக்கு அன்னிக்குப் பாட்டுதான்.

பாட்டியிருந்தவரைக்கும் எப்பவும் வீட்டில் சிவப்பரிசிச்சோறுதான். காலையில் பழையதும் மோரும் பச்சைமிளகாயும், மதியத்துக்கு வெள்ளி செவ்வாய் தவிர மத்தநாளெல்லாம் மீன்குழம்பும் சுடுசோறும். ராத்திரிக்குப் பால்சோறும் பக்கோடாவும். பண்டிகை வந்தாதான் இட்டிலி தோசை. இதுதான் பாட்டி இருந்தவரைக்கும் தினப்படி சமையல்.

மருமக வந்தபிறகு சிவப்புச்சோறு வெள்ளைச்சோறானாலும், வெஞ்சனமெல்லாம் விருப்பப்படி வேணும் அவருக்கு. இப்போதிருக்கிற சப்பாத்தி பூரியோ, உப்புமா கிப்புமாவோ அவருக்குச் சுத்தமாய்ப் பிடிக்காது.

 இந்த ஒத்த மனுசனுக்காகவாவது எப்படியும் சோறுவைக்கவேண்டிநயிருக்குதென்று வாய்விட்டுச் சிலநாள் புலம்புவாள் வாசுகி அண்ணி. ஆனாலும், முடிஞ்சா நீ வையி, இல்லேன்னா அதையும் நானே வச்சிக்கிறேன் என்று அவளுக்கு உரக்கப்பதில்சொல்லிவிட்டு உடைமரத்து முள்ளை ஒடித்துவிட ஆரம்பித்துவிடுவார் பாட்டையா. அவருக்குப் பின்னாலிருந்து தானும் மெள்ளமாகச் சொல்லுவாள் அண்ணி, "இவர் கிட்டேருந்து யார வேணுன்னாலும் பிரிச்சிரலாம்...சோறப் பிரிக்கமுடியாது என்று.



மல்லிப்பூப் பந்தலும் முல்லைப்பூச் சோறும்!

முன்னெல்லாம், முற்றத்துப் பந்தலில் சிரிக்கிற மல்லிகைப்பூ வாசமும், வாசல் திண்ணைக்கருகில் கட்டிக்கிடந்த வெள்ளாட்டுக்குடும்பத்தின் வித்தியாச வாசனையும் தோற்றுப்போக, வட்டிலில் முல்லைப்பூச் சுடுசோற்றில் புத்துருக்கு நெய்யும் மத்தியானத்து சாம்பாருமாய் ஆச்சி பிசைந்துகொண்டுவருவதற்குள் ஆளாளுக்கு கையை நீட்டிக்கொண்டு காத்திருப்பார்கள் பேரப்பிள்ளைகள்.

கையில், சின்ன உருண்டையாய்ச் சோறுவைத்து, அதன்மேல் கத்திரிக்காய் வதக்கலைக் கூடவைத்து ஆச்சி கொடுக்க, அதற்கு அதிகப்படி சுவைசேர்க்கும் தாத்தா சொல்லுகிற அந்தக்காலத்துக்கதைகள். எட்டத்தில் திண்ணையிலிருந்து இதையெல்லாம் கவனித்தபடி,கண்ணால் சாடைகாட்டித் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொள்வார்கள் அப்பாவும் அம்மாவும்.

உண்டபின் சிறிதுநேரம், விடுகதையும் வேடிக்கையுமாய்க் கழிய திண்ணைக்காற்றில் அன்னையில் மடியிலேயே உறங்கிப்போகும் ஒரு பிள்ளை. இன்னுங்கொஞ்சம் கதைசொல்லு தாத்தா என்று கன்னத்தைப்பிடித்துக்கொஞ்சும் இன்னொரு பிள்ளை. மண்ணிலொரு வீடுகட்டி சின்னக்குரலில் தனக்குத்தானே கதைசொல்லும் இன்னொரு பிள்ளை. இதையெல்லாம் ரசித்தபடி அங்கே, கன்னக்குழியோடு வெள்ளி நிலாவும்கூட வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும்.                            

சின்னத்திரையைப் பார்த்தபடி சோற்றுத்தட்டை அளைந்துகொண்டிருந்த தன்னுடைய பேத்தியிடம் சண்முகம் தாத்தா இதையெல்லாம்                 சொல்லச்சொல்ல, தொணதொணக்காம சும்மாயிருக்கமாட்டியா தாத்தா என்றபடி தன்னுடைய தட்டைத்தூக்கிக்கொண்டு தள்ளிப்போய் உட்காந்து, சீரியல் விளம்பரத்தில் சிரித்தபடி லயித்துப்போனது குழந்தை.

ஸ்வீட் எடுத்துக்கோங்க...



என்ன சமையல் செய்தாலும் அடுக்களை மாடத்தில் அவள் கைப்பட செய்துவைத்த சின்ன மஞ்சள் பிள்ளையாருக்கு ஒரு துண்டு எடுத்துவைத்துவிட்டு, என்னத்தை சமைச்சாலும் அது எல்லாருக்கும் நல்ல சுகத்தைத்தரணும் சாமி என்று வாய்விட்டு வேண்டிக்கொண்டு பின்னர் வீட்டிலிருக்கிற மற்றவர்களுக்கு எடுத்துக்கொடுக்கிற எச்சுமிப்பாட்டிமாதிரி, எழுதத்தொடங்குகிற இந்த வலைப்பக்கமும் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரவேண்டுமென்கிற வேண்டுதலுடன் இதோ வலைவாயிலில் வணக்கத்துடன் முதல் படி...

Search This Blog